புது நாவல்: 1975: சார் உங்களுக்கும் எனக்கும் பேங்கு வேலை தவிர வேறெதுவும் தெரியாது என்றேன். வாஸ்தவம் தாண்டா போத்தி என்றார்

”ஆமா, உனக்கு என்ன எல்லாம் மீன் வகை இருக்கு, எவ்வளவுக்கு போகும் ஒவ்வொண்ணும்னு தெரியுமோ? நாளைக்கு மீன்பிடிக்க லோன் கொடுத்தா என்ன பண்ணுவே வசூல் பண்ண”? ஜெனரல் மேனேஜர் விசாரித்தார்.

”ஒரு கவலையும் இல்லே சார், கடன் வசூலைப் பத்தி எதுக்கு கவலைப் படணும்? கொடுக்கறதுதான் முக்கியம்”.

அவர் என்னை நிமிர்ந்து பார்த்துச் சிரித்தார். “நீ ஜி.எம் என்ன, மேனேஜிங் டைரக்டராகத்தான் ரிடையர் ஆகப் போறே” என்றார்.

“நீங்க தான் சார், உன்னதமான பொசிஷன்லே ரிடையர் ஆவீங்க”

”நானா, பெருந்தொகையா ஒரு முந்திரிப்பருப்பு எக்ஸ்போர்ட்டருக்கு உடனே லாங்க் டெர்ம் லோன் தரணும்னு போன வாரம் தான் கால் வந்தது. நம்ம செண்ட்ரல் ஆபீஸ் ஆறாவது மாடியிலே இருக்கப்பட்டவா என்னைக் கூப்பிட்டு உடனே ஜி.எம் ரெகமண்ட் பண்ணி நோட் போட்டு அனுப்புன்னா. இன்ஸ்பெக்ஷன் போனா, தகர டப்பா யூனிட். ஐம்பதாயிரம் கூட பெறாது. நேற்றைக்கு ரயிலேற கிளம்பிண்டிருக்கேன். இந்த க்‌ஷணமே முந்திரி லோன் ரெகமண்ட் பண்ணுன்னு திரும்பவும் ப்ரஷர்”, அவர் சங்கடமாகச் சிரித்தார்

”அப்புறம் சார்”?

“அப்புறம் மங்களாபுரம் தான்”. விட்டுத்தள்ளு என்று சைகை காட்டினார். ”மங்களாபுரம் தெரியுமா? மங்களூர்னு மண்டூகங்கள் சொல்லும். மங்களாபுரம் பார்ட்டி தான் லோனுக்கு நிக்கறது”.

”சார், ராமேஸ்வரத்திலே புரோகிதர் வேண்டியிருக்குமா? வண்டியில் ஏறிய புரோகித புரோக்கர் விசாரித்தார். “சாம்பசிவ சாஸ்த்ரிகள், அடைய விளஞ்சான் குடும்பம்” என்று ஜிஎம் அடையாளம் சொல்லிக் கேட்க, “அவர் வியோகமாகி நாலு வருஷமாச்சு. வேறே சாஸ்திரிகள் கிட்டே கூட்டிப் போகலாமா?” என்று வந்தவர் ஆர்வமாகக் கேட்டார்.

“ஒண்ணும் வேணாம், நீங்க சவுகரியம்போல வாங்கோ. நான் இருக்கேன். இல்லேன்னா என்ன போச்சு? ஆவியா இருந்தாவது பிதுர் காரியம் பார்த்து கொடுக்கறேன்னு வாக்குதத்தம் பண்ணியிருக்கார் எங்க சாஸ்திரிகள். நான் பாத்துக்கறேன்”.

”அது சரி, பேஷா செய்யுங்கோ அண்ணா” என்று வலிந்து பெரிய கும்புடாகப் போட்டு விட்டு அவர் போக, “போத்தி, இதெல்லாம் பிசினஸுக்கு ஆள் பிடிக்கற உத்தி. காசு வரணும்னா இருக்கறவரையே இல்லைன்னு சொல்லிடலாம். அது கிடக்கு, இந்த ஹோல்டாலை உன் மாமனாரா வந்து இறக்குவார்? கைகொடு” என்றபடி மேல் தட்டில் இருந்த மகாபெரிய மூட்டை ஒன்றைக் காட்டினார் ஜி.எம். உயிரைத் துச்சமாக மதித்து அதை இழுத்துத் தள்ளிக் கீழே கொண்டு வந்தபோது ராமேஸ்வரம் வந்துவிட்டது.

நல்ல ஹோட்டலில் ஞாபகமாக அவரோடு எனக்கும் பக்கத்திலேயே அறை வாடகைக்கு எடுத்திருந்தார் ஜி.எம். “சார் எனக்கு பெரிய ஹோட்டல் ரூம் எல்லாம் தங்க அனுமதி இல்லே. பேங்க் காசு தரமாட்டாங்க” என்றேன். “இந்த ரெண்டு ரூமுக்குமே பேங்க் ஒரு பைசா அடைக்காது. நான் தான் சந்தோஷமா தர்றேன். நீ இதுக்கு மேலே இதைப் பத்தி ஒண்ணும் பேசாதே. கேட்டியா?”

ரூமுக்குப் போனதுமே தட்டுச்சுத்து வேட்டிக்கும் அரைக்கை சட்டைக்கும் மாறி வெளியே கிளம்பி விட்டார் ஜெனரல் மேனேஜர். “இங்கே நம்ம நூறுணி ஸ்வதேசி உன்னிமாங்கா பரமேசரன் ஓட்டல் வச்சிருக்கான். காளன் ஸ்பெஷலிஸ்ட். இந்தப்பக்கம் பண்ற மாட்டு மூத்திர திரவ பதார்த்தமான மோர்க்குழம்பு இல்லே காளன். கெட்டியா நல்ல புளிப்பும் காரமுமா இருக்கும். இந்த நாலஞ்சு தெருவிலே தானே ஓட்டல் எல்லாம் இருக்கு. வா, போகலாம்”.

அவரோடு ஒரு மணி நேரம் சுற்றியும் நூறுணி பரமேஸ்வரன் கெட்டியான விழுதாக காளன் பரிமாறும் பாலக்காட்டு ஓட்டல் கண்ணில் படாமல் போக, ஒழுங்காக குஜராத்தி பவனில் சப்பாத்தியும் கத்தரிக்காய்க் கறியுமாக பகல் உணவு. சாப்பிட்டு வெளியே வர அந்த ஓட்டலின் முதல் மாடிக்கு கூட்டம் கூட்டமாகப் போய்க் கொண்டிருந்தது கண்ணில் பட்டது. “வா விஸ்தரிச்சு முறுக்கலாம்” என்று அவர் கொழுந்து வெற்றிலை மேயப் போய்க் கீழே தாம்பூலம் விற்கிற கடையில் கேட்க பீடாக்காரன் சொன்னான் – “சார், பரமேஷ்வர் பால்காட் ஓட்டல் அது. இங்கிலீஷ்லே போர்ட் வச்சிருக்காங்க. போஜ்புரியிலே வச்சிருக்க வேணாமோ” என்றான். பரவாயில்லே, நம்மை அவன் போஜ்பூரிக்காரன்னு நினைச்சுட்டான் என்று மகிழ்ந்தபடி கூட நடந்தார் ஜெனரல் மேனேஜர். “நூறுணிக்காரன் சாப்பாடு பிராப்தம் இல்லே இப்போ. அப்புறம் அமையறதா பார்க்கணும்”.

சுடச்சுட முந்திரியும் பாதாமும் வறுத்து அத்திப்பழத் துண்டுகளோடு தரும் கடை வாசலில் கூட்டம். போய் வாங்கிட்டு வந்துடட்டா என்று கேட்டேன். முந்திரின்னாலே அலர்ஜி என்று மறுத்துவிட்டு கோவிலை நோக்கி நடந்தார்.

தாம்புக்கயறு கட்டிய இரும்பு வாளியோடு வந்த வழிகாட்டியோடு போய் கோவிலுக்குள் இருக்கும் தீர்த்தம் எல்லாம் ஒண்ணுவிடாமல் இரைத்து ஊற்றத் தலை நனைத்து சந்தோஷமாகக் குளித்தார் ஜி.எம். சாயந்திரம் கந்தமான பர்வதம் போய் பாறையில் ஏறி காற்றும் கடலும் ஆகாசம் தொட்டு நிற்பதை அனுபவித்துக் கண்ணை மூடியபடி நின்றார்.

“அதோ இருக்கு பாருங்க, தொலைவுலே தெரியுதே அதான் தனுஷ்கோடி, பத்து வருஷம் முந்தி அடிச்ச புயல்லே அழிஞ்சே போச்சு”, என்று காட்டினேன். வேறெதும் செய்யத் தோன்றாமல் கன்னத்தில் போட்டுக்கொண்டு, ”ஹரஹரான்னு இங்கேயே இருந்துடலாமான்னு இருக்கு. கோவில்லே கைடு உத்தியோகம் கூட எதேஷ்டம் இல்லே நூறுணி பரமேஸ்வரன் கடையிலே எலை எடுத்துப்போடற உத்தியோகம்” என்றார்.

“சார் உங்களுக்கும் எனக்கும் பேங்கு வேலை தவிர வேறெதுவும் தெரியாது” என்றேன். வாஸ்தவம் தாண்டா போத்தி என ஒத்துக் கொண்டார்.

ஞாபகமாக நூறுணி பரமேஸ்வரன் ஓட்டலில் ராச்சாப்பாட்டுக்காகப் படியேற, ’குக்கிங் கேஸ் தீர்ந்து போய் சப்ளை வரல்லே. இருக்கற சிலிண்டர் லீக் ஆகிண்டிருக்கு. கெரசினும் ஆகக் கம்மியா இருக்கு. இனி நாளைக்குத்தான். விடிகாலை காப்பி டிபன் அஞ்சரைக்கு கிடைக்கும். திருஷ்ணாபள்ளி ராமேஸ்வரம் பேசஞ்சர் நடு ராத்திரி ஒரு மணிக்கு வரும். அதிலே நாலு சிலிண்டர்..’

”என்னமோ எனக்கு போறதுக்கு மிந்தி இங்கே சாப்பிட்டுப் போக அதிர்ஷ்டம் இல்லே” அவர் நூறுணி பரமேஸ்வரனின் ஹோட்டல் கல்லா பிரதிநிதியிடம் சொன்னார். ஓட்டல் நாலு கை மாறி உடுப்பிக்கார ஹெக்டே ஒருவரிடம் தற்போது இருக்கிறதாம். ஆனா குக் எல்லாம் நூறுணி தான், கேட்டியா?

”நாளைக்கு பட்டினி.. காலையிலே ஆறரைக்கு வந்துடு. சாஸ்த்ரிகள் யார் கிடைச்சாலும் சரிதான். தர்ப்பணம் முடிச்சுட்டு வந்து உடுத்திண்டு லோன்மேளா போயிடலாம். மதியம் ரெண்டு மணிக்குத்தான் ஃபங்க்ஷன்”.

சார், அந்த டாண்டெக்ஸ்? ஒண்ணும் ஓடிப்போகாது. காலம்பற கொடு.

கொடுக்க முடியவில்லை. நடு ராத்திரிக்கு மாரடைப்பில் எங்கள் ஜெனரல் மேனேஜர் காலமாகி விட்டார். இந்தப் போத்தி பெற்றோரை காயங்குளம் ரெயில் விபத்தில் பறிகொடுத்துவிட்டு அழுத மாதிரி அழுதது அப்போதுதான். நானும் சென்னைக்கு ஜி.எம் படுத்திருக்க வேனில் போனேன். சவ சம்ஸ்காரத்தின் போது கூடவே இருந்தேன். முந்திரிப் பருப்பு லோன் கொடுக்காமல் அவர் போய்ச் சேர்ந்ததில் சிறு ஆறுதல் எனக்கு. என்ன மாதிரி அழுத்தம் அவருக்கு வந்திருக்கும் என்று எங்களுக்கெல்லாம் தெரியும்.

லோன்மேளா ரீஜனல் மேனேஜர் கலந்து கொள்ள சிறப்பாக நடந்தது. அந்த மேனேஜர் இல்லை என்றால் இந்த மேனேஜர். சாவி தீர்ந்த பொம்மைக்குப் பதிலாக, சாவி கொடுக்கப்பட்ட இன்னொரு பொம்மை

(எழுதிக் கொண்டிருக்கும் ‘1975’ நாவலில் இருந்து ஒரு பகுதி)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன